முனைவர் ப்ரஹ்மஸ்ரீ வா. ஸ்ரீரமண ஶர்மா
புராண விஷயம்
ஒருமுறை அஸுரர்களால் பீடிக்கப்பட்ட தேவர்களுக்கு வெற்றியை வேண்டி மஹாவிஷ்ணு சிவ பெருமானை ஆயிரம் தாமரைகளால் அர்ச்சித்தார். ஆனால் அதற்காக சேகரிக்கப்பட்ட ஒரு தாமரை காணாமல் போனது. தாமரையைப் போன்ற தமது கண்ணையே அவர் அர்ப்பணித்தார். சிவனார் தோன்றி அந்த கண்ணையும் மேலும் அஸுரர்களை வீழ்த்துவதற்கான சக்ரத்தையும் தமது நண்பருக்கு அளித்தார்.
தமிழகத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை எனும் க்ஷேத்ரத்தில் இது நடந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதனால் அந்த ஸ்வாமிக்கு நேத்ரார்ப்பணேஶ்வரர் – தமிழில் வீழிநாதர் – என்ற பெயர் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் மஹாவிஷ்ணுவே ஈசனை அர்ச்சிக்க சொன்ன ஆயிரம் நாமங்கள் லிங்க புராணம் பூர்வார்த்தம் 98வது அத்யாயத்தில் உள்ளன. மொத்தம் 11 சிவ ஸஹஸ்ரநாமங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதில் முழுமுதற்கடவுளான விஷ்ணு முழுமுதற்கடவுளான சிவனை ௸ தருணத்தில் அர்ச்சிக்க செய்த ஸ்தோத்ரம் என்பது இதன் சிறப்பு.
லிங்க புராணத்திற்கு கணேச பல்லாளர் என்ற பெரியவர் “ஶிவ தோ₁ஷிணி” என்ற உரை இயற்றியுள்ளார். இது 1907ல் மும்பை வேங்கடேஶ்வரா அச்சகத்தாராலும் பிறகு 1973ல் மோத்திலால் பதிப்பகத்தாராலும் வெளியிடப்பட்டது.
ஶ்ரீசரணர்களின் ஸூக்ஷ்ம ப்ரேரணையில் இது மொழிபெயர்க்கப்பட்டது
1982 டிசம்பரில் நமது காஞ்சீ காமகோடி பீடத்தின் மூத்த பக்தரான ஶ்ரீ கோடம்பாக்கம் ஜயராமன் அவர்கள் மஹாகாம்வ்-ல் ஶ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர்களை தரிசிக்க ஒரு ப்ரதோஷ தினத்தன்று சந்தர்ப்பம் அமைந்தது. அச்சமயம் ஶ்ரீசரணர்களின் ஸந்நிதியில் இந்த ஸஹஸ்ரநாமம் வாசிக்கப்பட்டதை அவர் கவனித்தார். பிறகு ப்ரஹ்மஶ்ரீ ஶ்ரீவத்ஸ ஸோம தேவ ஶர்மாவின் அஷ்டாதஶ புராண ஸங்க்ரஹத்தின் உதவியுடன் இது லிங்க புராணத்தில் இருப்பதை அறிந்தார்.
மக்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள இதை மொழிபெயர்ப்புடன் வெளியிட சில ஆஸ்திக நண்பர்களுடன் கலந்தாலோசித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் ஸம்ஸ்க்ருத பாடங்கள் நடத்தி வந்த ஶ்ரீ ஜானகிரமணன் என்பவரிடம் மொழிபெயர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஶ்ரீ ஜானகிரமணனோ “நாமாக இத்தகைய பெரும் காரியத்தில் இறங்க முடியாது. ப்ராசீனர்களின் வ்யாக்யானத்தை முன்னிட்டே செய்ய இயலும்” என்று தயங்கினார். பல நூலகங்களில் தேடியும் அத்தகைய நூல் கிடைக்காமல் போனது.
சென்னை கீழ்த்திசை நூலகத்திலிருந்து அவர் ஏமாற்றத்தோடு வெளியில் வந்துகொண்டிருந்த போது பரிச்சயம் இல்லாத ஒருவர் வந்து “என்ன தேடுகிறீர்கள்” என்று கேட்க இவர் தெரிவித்தார். அதன் மூலமாக ஶிவ தோ₁ஷிணி வ்யாக்யானத்துடன் கூடிய லிங்க புராணத்தைக் கண்டுபிடிக்க இயன்றது. இவ்வாறாக இறையருள் துணை நின்று பலனளித்தது.
இதன் அடிப்படையில் ஶ்ரீ ஜானகிரமணன் தமிழ் மொழிபெயர்ப்பு செய்தார். இது சென்னை, சூளைமேடு, இஷ்ட ஸித்தி விநாயகர் வேத பாராயண ஸபா மூலமாக 1989 நவம்பரில் வெளியிடப்பட்டது.
மேலும் பிறகு 1991 ஜூலையில் ஹ்ருஷீகேஶத்தில் உள்ள ஶ்ரீ புருஷோத்தமாநந்த ஆஶ்ரமம் மூலமாக அவரே செய்த ஹிந்தி மொழிபெயர்ப்புடன் வெளியிடப்பட்டது. (அந்த புத்தகத்தின் விலையாக “குரு மஹாராஜரிடம் ப்ரேமையும் தினமும் வாசிப்பதும்” என்று எழுதப்பட்டிருந்தது.)
இதன் பல ஶ்ருதியை ஶ்ரீசரணர்கள் அருளியது
இந்த இரண்டு வெளியீடுகளின் முகவுரையிலும் காஞ்சீ காமகோடி பீடாதிபதி ஶங்கராசார்ய ஸ்வாமிகளான நமது ஶ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர்கள் இந்த ஸஹஸ்ரநாமத்திற்கு கீழ்க்கண்ட பலனைக் கூறியதாக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். மொழிபெயர்ப்பு செய்த ஶ்ரீ ஜானகிரமணன் வெளியிடுமுன் ஶ்ரீசரணர்களை தரிசிக்க சென்றிருந்த போது இந்த அனுக்ரஹம் ஆனதாகத் தெரிகிறது.
“தற்சமயம் காலத்தின் கோலத்தால் ஒற்றுமையின்மை பல நிலைகளில் காணப்படுகிறது. இதனால் தம்பதிகள், உடன்பிறந்தவர்கள், பெற்றோர்-மக்கள் போன்ற குடும்ப பரிவாரங்கள், நண்பர்கள், ஸ்தாபனங்கள், ஸமுதாயங்கள், மாநிலங்கள், நாடுகள் இவற்றுக்குள் பிரிவினை, சச்சரவுகள், போர்கள் என்ற அளவுக்கு ஏற்படலாம். அதற்கு இதனை ஓதுவது சிறந்த பரிஹாரம் ஆகும்” என்று ஶ்ரீசரணர்கள் அருளியுள்ளார்கள்.
ஹரி-ஹர ஒற்றுமையைக் குறிக்கும் இந்த ஸ்தோத்ரத்திற்கு இத்தகைய பலனை ஶ்ரீசரணர்கள் இயம்பினார்கள் என்பதை நாம் அறியமுடிகிறது. நமது ஶ்ரீமடத்தின் ஸ்தாபனமான அத்வைத ஸபாவின் பொன்விழா வெளியீடாக வந்த “அத்வைத அக்ஷர மாலிகா”விலும் “பகவத்பாதர்களின் ஸித்தாந்தத்தில் சிவ விஷ்ணு அபேதம்” என்ற கட்டுரையை முதன்முதல் கட்டுரையாக ஶ்ரீசரணர்களே அருளியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
தற்சமய வெளியீட்டின் பின்னணி
2019 ஜனவரியில் இந்த ஸஹஸ்ரநாமத்தின் ஹிந்தி பதிப்பை முதன்முதலாகப் பார்த்தேன். ஆனால் அதைப் படித்ததில் சில சந்தேகங்கள் ஏற்பட்டன. ப்ராசீன வ்யாக்யானத்தை முன்னிட்டு பாட சோதனம் செய்வது உசிதம் என்று கருதி முகவுரையில் குறிப்பிடப்பட்ட வ்யாக்யானத்தைத் தேட முற்பட்டேன். அப்போது கிடைக்கவில்லை.
பல வருடங்களாக எனது பாட்டனார் தினமும் விஷ்ணு மற்றும் கணேச ஸஹஸ்ரநாமங்களை வாசித்து வந்திருந்தார். 2021 மார்ச் அளவில் அவர் மிகவும் அசக்தமாக இருந்தார். ஆகவே அவர் வாசித்து வந்ததை நான் வாசிக்கலாம் என்று எண்ணி கணேச ஸஹஸ்ரநாமத்திற்கு ஶ்ரீ பாஸ்கர ராய வ்யாக்யான பூர்வகமாக பாட சோதனம் செய்தேன்.
அச்சமயம் ௸ சிவ ஸஹஸ்ரநாமம் குறித்து மீண்டும் முயற்சித்தேன். ஶ்ரீ ஜானகிரமணன் பிற்காலத்தில் ஶாந்தாநந்த புரீ என்ற பெயரில் துறவறம் மேற்கொண்டு ஸித்தியடைந்திருந்தார். அவரது பக்தர்கள் செய்திருந்த ஒரு வலைத்தளம் கிடைத்தது. அதில் ஹிந்தி மொழிபெயர்ப்பின் மற்றொரு பதிப்பு உள்ளது. ஆகவே ஸ்வாமிகள் சேர்த்து வைத்திருக்கலாம் என்றெண்ணி வ்யாக்யானம் குறித்து அவர்களிடம் விசாரித்தேன். தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
2022 மே மாதத்தில் ௸ பலனைக் குறிப்பிட்டு “சிவ ஸஹஸ்ரநாமத்தை ப்ரச்சாரம் பண்ணும்படி உத்தரவாகிறது” என்று நமது ஆசார்ய ஸ்வாமிகள் மஹாஸந்நிதானத்திலிருந்து தகவல் கிடைத்தது. ஆகவே குருவருளை முன்னிட்டு மீண்டும் சிலரிடம் விசாரித்தேன்.
அந்த அனுக்ரஹ விஶேஷத்தில் இந்த தருணத்தில் தான் ஶ்ரீ கோடம்பாக்கம் ஜயராமன் அவர்கள் மூலமாக முன்பு நடந்த ஸம்பவங்கள் குறித்து விவரம் அறிந்தேன். அவர் முன்பு வெளியிடப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு புஸ்தகத்தின் ப்ரதியையும் அனுப்பிக் கொடுத்தார்.
அடுத்த பெரிய அனுக்ரஹமாக தில்லைஸ்தானத்தில் இருக்கும் நமது ஶ்ரீமடத்து பக்தர் ப்ரஹ்மஶ்ரீ தில்லைஸ்தானம் ராஜகோபால கனபாடிகளிடம் நான் (முன்பு ஶ்ரீ ஜானகிரமணனைப் போல்) தேடிக்கொண்டிருந்த வ்யாக்யான ஸஹித சிவ ஸஹஸ்ரநாமம் அடங்கிய லிங்க புராணம் முழுவதும் இருப்பது அறிந்தேன். இதுவே அந்த மோத்திலால் பதிப்பு.
இதன் அடிப்படையில் தான் தற்சமயம் பாட சோதனம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே நமது காமகோடி ஶ்ரீசரணர்களின் ப்ரேரணையில் பலரில் ஒருமித்த முயற்சியாலும் ஒத்துழைப்பாலும் உருவாகியுள்ளது இந்த பதிப்பு. இதனை இந்த மஹாஶிவராத்ரி தருணத்தில் “குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேஶ்வரஃ” என்றபடி ஹரி-ஹர-அபேத ஸ்வரூபமான நமது ஶ்ரீசரணர்களின் சரணங்களில் ஸமர்ப்பித்து தன்யனாகிறேன்.
இயன்றவரை சுத்தமாக செய்ய முயற்சித்தாலும் மனித சகஜமான பிழையால் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். ப்ரமாணத்துடன் சுட்டிக் காட்டினால் திருத்தி வெளியிட இயலும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பழைய பதிப்புகளைப் போட்டவர்கள், ௸ நிகழ்ச்சிகளில் பல வித பங்குகளை வகித்த ஶ்ரீ ஜயராமன் அவர்கள், வ்யாக்யான ஸஹிதமான பாடத்தை நகலெடுத்துக் கொடுத்த தில்லைஸ்தானம் குடும்பத்தார், ஹிந்தி பதிப்பை அனுப்பிய ஶ்ரீமதி வித்யா, கோப்புகளை உருவாக்குவதில் உதவிய ஶ்ரீ கார்த்திக் மற்றும் உதவிய இன்னும் பல ஆஸ்திக நண்பர்களுக்கும் க்ருதஜ்ஞதையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஹரி-ஹரர்களும் “மைத்ரீம் பஜத” என்று உபதேசித்த நமது ஶ்ரீசரணர்களும் நம் அனைவருக்கும் அத்வைதத்தின் வ்யாவஹாரிக வடிவமான ஒற்றுமையை அனுக்ரஹிப்பார்களாக!
ஜய ஜய ஶங்கர ஹர ஹர ஶங்கர!