Menu

Bhagavatpada mahima

பகவத்பாத மஹிமா 

சாஸ்த்ர ரத்னாகர ஸ்ரீ ராமசந்திர தீக்ஷிதர் பிரின்ஸிபல், ஸம்ஸ்கிருத காலேஜ், மைலாப்பூர்

இந்த அத்வைத சபை 49 வருஷமாய் மேலும் மேலும் அபிவிருத்தி அடைந்திருப்பதற்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீ பரமாசார்யார்களுடைய பூர்ணானுக்கிரஹமே காரணம். சபையின் ஆரம்ப தினத்தில் ஸர்வமதத்திற்கும் ஶ்ரேஷ்டமான அத்வைத தர்ஶநத்தை ப்ரதிஷ்டைசெய்து ஸர்வதேஶங்களுக்கும், விஶேஷமாய் பாரதபூமிக்கும் மஹோபகாரம் செய்த ஸ்ரீ சங்கர பகவத்பாதர்களை ஸ்மரித்து அதன் மூலம் ஆசார்ய ஈஶ்வராளிடத்தில் நாம் ஈடுபடவேண்டும். இதுதான் இச்சபையின் ஸம்ப்ரதாயம்.

பகவத்பாத மஹிமையை பல ஸமயங்களில் சிறந்த பண்டிதர்கள் எடுத்து விஸ்தரித்திருக்கிறார்கள். ஆயினும் எல்லையற்ற மஹிமை பூர்ணமாக சொல்லப்பட்டதாக கருத இயலாது, அதுபோலவே இன்று நானும் கொஞ்சம் சொல்ல எண்ணுகிறேன்.

நமது ஸ்ரீ பரமாசார்யாள் மைலாப்பூரில் உபதேசித்த நன்மொழிகளிலிருந்து ஸ்ரீ பகவத்பாத அவதார ஸம்பந்தமாய் ஓர் விஷயம் இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது. ஸ்ரீ வித்யாரண்ய சங்கர விஜயத்தில் இவ்விஷயம் காணப்படாததால் இதை எல்லோரும் நன்கு அறிந்து கொள்வது முக்யம்.

“चतुर्भिस्सह शिष्यैस्तु शंकरोऽवतरिष्यति”

என்று வாயு புராணத்தில் ஆசார்யாள் அவதாரத்தைபற்றி சொல்லி இருக்கிறது. மற்றும் இதர புராணங்களிலும் சங்கராசார்யாள் பரமசிவனுடைய பூர்ணாவதாரம் என்று கூறப்பட்டுள்ளது. புராணங்கள் எல்லாம் வேதத்தின் உபப்ருஹ்மணம். விரிவான வ்யாக்யானம். ஆகவே இவ்வசனங்களுக்கு மூலம் வேதத்தில் இருக்கவேண்டும்.

ஸ்ரீருத்ரத்தில் சொல்லப்படும் नमः कपर्दिने च व्युप्तकेशाय च என்கிற வசனத்திலும் மஹாநாராயணத்தில் இருக்கும் ईशानस्सर्वविद्यानाम् என்கிற வசனத்திலும் இந்த அவதாரத்தைப்பற்றி குறிப்பு காணப்படுவதாக ஸ்ரீ அபிநவ சங்கரர் தனது ருத்ர பாஷ்யத்தில் சொல்கிறார். லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யத்தின் முகவுரையில் பாஸ்கரராயர் ரிக்வேதத்திலுள்ள சங்கராவதாரக் குறிப்பை விஷ்ணு தர்மோத்தர புராணத்தில் விளக்கி இருப்பதாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

श्रीरामं प्रति पुष्कराभिधमहायक्षेण वेदत्रयव्याख्यानावसरे विशिष्य कथितं श्रीविष्णुधर्मोत्तरे । एतां धेनुमुपह्वयामि सुदुघामित्यृग्गतं शंकराचार्यं शिष्यचतुष्टयेन सहितं वन्दे गुरूणां गुरुम् ॥

புஷ்கரரென்னும் யக்ஷர் ஸ்ரீராமனுக்கு மூன்று வேதங்களின் அர்த்தத்தை வ்யாக்யானம் செய்யும் தருணத்தில் उपह्वये सुदुघां धेनुमेताम् என்கிற மந்திரம் சங்கராவதாரத்தை குறிப்பிடுகிறதென்று உபதேசித்திருக்கிறார் என்பது பொருள். ஆனால் இந்த விஷயம் அச்சுப்போட்டு இப்பொழுது கிடைக்ககூடிய விஷ்ணுத்தர்மோத்தர புஸ்தகத்தில் காணப்படவில்லை. ஆதலால் பழைய ஓலைச் சுவடிகளை பரிசோதித்து முக்யமான இந்த விஷயத்தை கண்டுபிடிக்க வேண்டும். கால நிர்ணயத்தில் ஈடுபட்டு வேலை செய்து வரும் நமது விமர்சகர்கள் இவ்விஷயத்தில் தமது கவனத்தை செலுத்தினால் அதுவும் உத்தமமே. நிற்க.

ईश्वरात् ज्ञानमन्विच्छेत् मोक्षमिच्छेज्जनार्दनात्

என்கிற வசனத்தின்படி வித்யயை உபதேசிப்பவர் எவருமே பரமசிவன் அம்ஶமென்று விளங்குகிறது. ஸமஸ்த தத்வங்களும் அடங்கிய ஸர்வதர்ஶந பூஷணமாகிய அத்வைத வித்யையை உபதேசித்த ஸ்ரீ சங்கரரையே மேற்கூறிய ईशानस्सर्वविद्यानाम् என்கிற வாக்யம் பொதுவாக குறிப்பிடுகிறதென்பதில் ஐயம் இல்லை.

ஆயினும் नमः कपर्दिने च व्युप्तकेशाय च என்கிற ருத்ரத்தில் சங்கராவதாரம் சொல்லப்படுகிறதா என்பதை மாத்திரம் சிறிது கவனிப்போம். பரமசிவனுடைய ஜடைக்கு மாத்திரம் கபர்தம் என்று தனி பெயர். व्युप्तकेशः சிகை அகற்றியவர் என்று அர்த்தம். முன்பதம் ஜடை தாங்கிய சிவமூர்த்தியையும் பின்பதம் ஸன்யாஸிகளான ஆசார்யர்களின் மூர்த்தியையும் காண்பிக்கிறது.

இங்கு ஓர் ஸந்தேஹம் வரக்கூடும். ருத்ரத்தில் ஈச்வரன் ஸர்வரூபியாக வர்ணிக்கப்படுகிறார். உலகத்தில் எவ்வளவோ ஸன்யாசிகளும் துறவிகளும் இருக்கிறார்கள். உபநயனம் செய்யப்பட்ட ஸாமக ப்ரஹ்மசாரிகளும் இருக்கிறார்கள். மற்றும் கணக்கற்ற சிகை இல்லாத மனிதர்களும் தற்காலத்தில் காணப்படுகிறார்கள். व्युप्तकेश என்னும் பதம் இவர்கள் எல்லோர்களையும் விட்டு சங்கராசார்யரை மாத்திரம் ஏன் குறிக்கவேண்டும்?

இந்த சந்தேஹத்திற்கு பதில் – ஈச்வரன் ஸர்வாத்மகராக இருந்தாலும் அவரை வணங்கும் பொழுது இந்த உருவம் உடையவருக்கு நமஸ்காரம், வேறொரு உருவம் உடையவருக்கு நமஸ்காரம், மற்றொரு உருவமுடையவருக்கு நமஸ்காரம், என்று வெவ்வேறாக சொல்லவேண்டியிருக்க இவ்விடத்தில் ஜடைமுடியானுக்கும், சிகையற்றவனுக்கும் நமஸ்காரம் என்று ஒரே தடவையாக நமஸ்காரம் சொல்வதில் ஏதோ விசேஷம் இருப்பதாக தோன்றுகிறது. இவ்விரண்டு ஸ்வரூபங்களுக்கும் ஏதோ ஸம்பந்தம் இருக்கவேண்டுமல்லவா ? இதற்கு மாறாக இவ்விரண்டும் முரண்பாடுள்ளதாகவே இருக்கிறது. ஆனால் ஈச்வரனை வர்ணிக்கும்பொழுது பலவிடங்களில் இவ்வாறு முரண்படும் விஷயங்களும் காணப்படுகின்றன.

पश्यत्यचक्षुः स शृणोत्यकर्णः (श्वेताश्वतरम्) द्रवस्संघातकठिनः (कुमारसंभवम्) இதுபோன்ற உபதேசங்களுக்கு முடிவில் நிராகாரமே தத்வம் என்பதில் முக்ய தாத்பர்யமென்பார்கள். ருத்ரத்திலுள்ள இந்த வாக்யத்திற்கும் அவ்வாறே தாத்பர்யமென்று தீர்மானம் செய்யக்கூடும். ஆயினும் ருத்ரத்தைப் பற்றின மட்டில் ஈஶ்வரனை வர்ணிக்கும் போக்கு இருவகைப்பட்டது. ஒன்றுக்கொன்று ஒற்றுமையுள்ள குணங்களை சேர்த்து வர்ணிப்பது ஒன்று. இதை இந்த அனுவாகத்திலேயே

नमस्सहस्राक्षाय च शतधन्वने च

என்கிற இடங்களில் காணலாம். ஆயிரம் கண் படைத்து நூறு வில்களை நாண் ஏற்றுகிறவர் என்றர்த்தம். அநேகம் கண்களிருப்பது அநேகம் வில்களை தரிக்க ஒற்றுமை உடையதே. முரண்படும் குணங்களை சேர்த்து வர்ணிப்பது மற்றொரு மார்க்கம் அவ்வித வர்ணனத்தையும் அடுத்த

नमो ज्येष्ठाय च कनिष्ठाय च

என்கிற அனுவாகத்தில் காணலாம் ஆகவே कपर्दी व्युप्तकेशः என்பதற்கு மேல் அனுவாகமே தக்க இடம். இப்படி இருக்க नमो भवाय च என்கிற இந்த அனுவாகத்தில் படிக்கப்பட்டிருப்பதால் இவ்விரண்டிற்கும் ஒருவிதமான ஒற்றுமையும் நெருங்கின ஸம்பந்தமும் இருந்து தீர வேண்டுமென்று ஸ்பஷ்டமாய் விளங்குகிறது.

இதற்கு உபப்ருஹ்மணமாகிய பவிஷ்ய புராணத்திலுள்ள சங்கராவதார வரலாற்றை இத்துடன் சேர்த்து நன்கு பரிசீலனை செய்தால் விரோதம்போல் தோன்றுகிற இவ்விரண்டிற்கும் எவ்வளவு அன்யோன்யம் இருக்கிறதென்பது புலனாகிறது. கபர்தம் என்னும் பரமசிவன் ஜடையிலிருந்து ஆவிர்பவித்த வீரபத்ரர் தக்ஷயாகத்தை அழித்த பிறகு வால்மீகி மஹர்ஷியின் தபோ வனமாகிய உத்பலவனத்தில் சிறிது காலம் வசித்து பிற்காலத்தில் தக்ஷிண தேசத்தில் பைரவதத்தரென்று பிரசித்தி பெற்ற ஒரு அந்தணருக்கு பிள்ளையாக அவதரித்தார். இவரே சிவகுரு பவிஷ்ய புராணத்தில்

विप्रभैरवदत्तस्थगेहे गत्वा स वै शिवः ।
तत्पुत्रोऽभूत् कलौ घोरे शंकरो नाम विश्रुतः ||

என்று அவதார பூர்வசரித்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சிவகுருவே தபோமஹிமையினால் பரமசிவனையே தனக்கு புத்திரனாக பெற்றதும் அவதாரம் முதல்கொண்டு ஸ்ரீ சங்கரருடைய லோகோத்தரமாயும் திவ்யமாயுள்ள நிகழ்ச்சிகளும் ஸ்ரீ சங்கர விஜயத்தில் விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இங்கு பரமசிவன் கபர்தத்திற்கும் ஸ்ரீ சங்கரருக்கும் உள்ள ஸம்பந்தம் எவ்விதமென்று இப்பொழுது விளங்குகிறதல்லவா? பரமசிவனுக்கும் சங்கரருக்கும் ஸாக்ஷாத் அவதாரம் என்கிற ஸம்பந்தம் எல்லோரும் அறிந்ததே. இது மாத்திரமல்லாமல் ஸ்ரீ ஆதி சங்கரரின் பிதாவாகிய சிவகுரு வீரபத்ரரின் அவதாரம், அந்த வீரபத்ரரும் கபர்தியான பரமசிவனின் அவதாரம் இவ்வாறு ஸ்ரீ சங்கர பகவத்பாதர்களுடைய த்ரிபூருஷமும் பரமசிவமயமாகவே விளங்குகிறது.

சபையோர்களே! नमः कपर्दिने என்கிற ஶ்ருதியை மற்றொருதரம் நினைத்து அதிலுள்ள இரண்டு பதங்களின் அனுபந்தம் ஆஹா! எத்தகைய அழகும் ரஸமும் வாய்ந்தது என்று இப்பொழுது கவனியுங்கள்! कपर्द என்கிற பதத்தினால் ஸுசிக்கப்பட்ட ஜடை மூலமான இந்த பரம்பரா ஸம்பந்தம் ஆதி சங்கரருக்கே பொருத்தம் உள்ளதாகையால் व्युप्तकेशः என்கிற பதத்திற்கு ஆதி சங்கரர் என்றே பொருள் கொள்ள வேண்டும். மற்ற துறவிகளிடத்து இந்த பதம் பொருந்தாது. இந்த பவிஷ்யபுராண உபப்ருஹ்மணத்தினால் கிடைத்த ரஹஸ்யம் இதுவேயாகும்.

இப்பொழுது ஆதி பகவத்பாதர்களின் அவதாரமாக ப்ரகாசிக்கின்ற நமது ஸ்ரீ பரமாசார்யாளின் ஆஜ்ஞையை மேல் கொண்டு இவ்விஷயமாக ஓர் உபன்யாஸ நிபந்தம் எழுதி அதை மஹா ஸன்னிதானத்தில் விஞ்ஞாபித்திருக்கிறேன். அதில் சங்கராவதார விஷயமாக மீண்டும் அனேக புராண உபப்ருஹ்மணங்களும் அவைகளின் விவரங்களும் அடங்கியிருக்கின்றன. அவற்றையெல்லாம் அவகாசம் உள்ள வேறொரு ஸந்தர்ப்பத்தில் சபையோருக்கு தெரிவித்து கொள்ள வேண்டுமென்று என்னுடைய பேரவா. நமது பகவத்பாதாள் இயற்றிய சிறந்த உபதேஶ கிரந்தங்களில் முக்யமான தஶஶ்லோகியின் அமைப்பைப் பற்றி இன்று உபன்யாஸத்தில் கொஞ்சம் சொல்ல வேண்டுமென்று சபையின் நியமனம் அதை ஒட்டி பகவத்பாதர்களின் பால்ய சரித்திரத்தை விட்டு, மேல்பாகத்தில் சிறிது தெரிவிக்கிறேன்.

இவ்விதம் பாரம்பர்யமாய் சிவவடிவமாகவே அவதரித்த ஸ்ரீ சங்கரர் முதலையின் வியாஜத்தினால் மாதாவின் அனுமதிபெற்று பிரும்ஹசர்யத்திலிருந்தே ஸந்யாஸத்தை ஸ்வீகரித்து தனக்குத் தக்க குருவைக் காண நர்மதையின் அக்கரையில் யோக நிஷ்டையிலிருக்கும் ஸ்ரீ கோவிந்த யதீந்திராள் ஸந்நிதியை அணுகினார். அவர்கள் ஸமாதி கலைந்து ‘‘நீ யார்?” என்று வினவ பகவத்பாதாள்

“न भूमिर्न तोयं न तेजो न वायुर्न खं नेन्द्रियं वा न तेषां समूहः ।
अनेकान्तिकत्वात् सुषुप्त्येकसिद्धस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥”

என்று பத்து ஶ்லோகங்களால் பதிலுரைக்கிறார். இதிலிருந்து ஆசார்யாளுடைய மஹிமை பூர்ணமாக விளங்குகிறது.

உலகத்தில் “நீ யார்” என்கிற கேள்விக்கு “நான்” என்னும் பதத்தை முதலில் சொல்லிய பிறகு “இன்னான்” என்று விடையளிப்பார்கள். ஸ்ருஷ்ட்யாதியில் ஹிரண்யகர்பர் தன்னை “அஹம்” என்று வழங்கியதால் அவருக்கு அப்பெயர் வந்தது. ஆகவே நாளது வரையில் அவருடைய வ்யஷ்டி ரூபமாகிய ஸர்வப்ராணிகளுக்கும் இந்த அஹம் சொந்தமாகிவிட்டது. ஹிரண்யகர்பரைப் போலவே நாமும் அஹம் என்பதை நிவர்த்தித்துக்கொள்வது தான் பரம புருஷார்த்தம், என்று ப்ருஹதாரண்யகம் உபதேசிக்கிறது.

மேற்கூறிய ஶ்லோகத்தில் இந்த அகத்தை ஸ்தூல சரீரம் முதல் பிரகிருதி வரையிலுள்ள ஜட வஸ்துவினின்று விலக்கி தன் ஸ்வரூபத்தை ப்ரம்ஹத்தில் ஐக்யப்படுத்துகிறார் – न भूमिः என்று முதல் நான்கு நிஷேதங்களால் பூமி முதலிய நான்கு பூதங்களின் சேர்க்கையாகிய ஸ்தூல சரீரமே ஆத்மா என்கிற சார்வாக மதம் கண்டிக்கப்பட்டது. பூதங்களைத் தவிர ஸங்காதம் ஒன்று சார்வாக மதத்தில் வேறுகிடையாது. ஆனது பற்றி தனியாக நான்கு நிஷேதங்கள் ஆவஶ்யகமென்று ரஹஸ்யம். ஸங்காதத்தை ஒப்புக்கொண்டாலும் அது ஆத்மாவாகாது என்பதற்காக न तेषां समूहः என்று கூறப்பட்டிருக்கிறது. न खम् என்று சூன்யவாதிகளின் நிராகரணம். नेन्द्रियम् என்பது இந்திரியாத்ம வாதத்தை விலக்குகிறது.

இவ்விதமே பிராணன், மனது, புத்தி, பிரகிருதி, இவைகளும் நானல்ல. இவையெல்லாம் ஸத் அல்ல. ஆத்மா ஸத்யம். இவை தேசகால வஸ்துக்களால் பரிச்சின்னமாகி அழிந்து போவதாலும் ஸுஷுப்தியில் இவை நீங்கி ஆன்மா மட்டும் ஆநந்தரூபியாக பிரகாசிப்பதாலும் ஆன்மா இவைகளைக் காட்டிலும் வேறு. ஆதலால் அஹங்காரத்தை நீக்க அவஸ்தாத்ரயத்தை சோதிக்க வேண்டும். பகவத்பாதாள் தசஶ்லோகியில் அவஸ்தைகளை சோதித்து ஸ்வயஞ்ஜோதியான ஆன்மாவை உபதேசித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த ஶ்லோகங்களில் கையாளப்பட்ட ஆத்மோபதேச முறையை நன்கு கவனித்தல் வேண்டும். உபநிஷத்துகளில் இரண்டு மார்க்கமாக ஆத்மா நிரூபணம் செய்யப்படுவதைக் காணலாம்.

அவற்றுள் नेति नेत्यात्मा என்று இவ்வாறு நிஷேதமுகமாய் எடுத்துரைப்பதொன்று. நாம ரூபங்களற்ற தத்வத்தை உபதேசிக்க இதுவே சிறந்த முறையாகும். புத்தி கோசரமாயுள்ளவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக நிஷேதித்துக்கொண்டே போனால் எது மிஞ்சி நிற்கிறதோ அதுவே ஆத்மா என்பது இதன் முக்கியமான கருத்து. இம்மார்கத்தைப் பின்பற்றியே ஆசார்யாளும் இப்பிரகரணத்தில் ஶ்லோக பூர்வார்த்தங்களினால் நிஷேதமுகமாய் ஆத்மாவை உபதேசிக்கிறார்.

सत्यं ज्ञानमनन्तम् என்று வெவ்வேறாகத் தோன்றும் வஸ்துக்களை ஒன்றாகச் சேர்த்துச் சொல்வதினால் அவற்றின் மாறுபாடுள்ள தன்மைகளை நீக்கி ஸ்வரூபம் ஒன்றே என நிரூபணம் செய்வது உபநிஷத்தில் இரண்டாவது முறை. இதையே விட்டும் விடாத லக்ஷணையென்பர். ஶ்லோக உத்தரார்த்தங்களில் இம்முறையில் ஆசார்யாள் ஆத்மோபதேசம் செய்கிறார். பகவத்பாதர்களின் ஶ்லோகங்களில் கூட வைதிக ஆத்மோபதேஶத்தன்மை ப்ரகாசிக்கின்றது. பாருங்கள்!

லோகோத்தரமான இது போன்ற விடையைக்கேட்டு கோவிந்தபாதர் “நீயே சங்கராவதாரம்” என ஆசார்யாளைப் புகழ்ந்து அவருக்குத் தத்வோபதேஶம் செய்தருளினார். ஸம்ப்ரதாயப்படி உபதேசம் முடிந்ததும் ப்ரம்ஹஸூத்ரம் முதலியவைகளுக்குப் பாஷ்யம் செய்து லோகத்தில் ப்ரசாரஞ்செய்ய அனுமதி கொடுத்தார். முடிவில் ஸ்ரீ காசியில் ஆசார்யாள் ப்ரஸ்தான த்ரய பாஷ்ய ப்ரவசனம் செய்யும் பொழுது கங்கா தீரத்தில் ப்ரம்ஹ விஷ்ணு ருத்ராள் மூவரும் பிரஸன்னமாய் மும்மூர்த்திகளின் ஸன்னிதியிலேயே பாஷ்யமானது அரங்கேற்றப்பட்டது.

இவ்வாறு எல்லையற்ற பகவத்பாத மஹிமையில் இன்றைய தினம் சிறிதளவு ஸ்மரித்தோம். இதுவே தற்காலம் ஆதி பகவத்பாதர்களின் அவதாரமாகிய ஸ்ரீ காஞ்சி காமகோடியில் விளங்கும் நமது பரமாசார்யாளுடைய பூஜையாகவும் ஆகிறது. ஆகையினால் பரமசிவன் பகவத்பாதர், சங்கராசார்ய ஸ்வாமிகள் இவாளுடைய பரமானுக்ரஹத்தினால் இச்சபைக்கும் லோகத்துக்குமே எல்லாவித ஶ்ரேயஸ்ஸும் உண்டாகும்.

அத்வைத சபை கும்பகோணத்தின் 1943-ஆம் வருடம் நடந்த வித்வத் ஸதஸ்ஸின் நிகழ்ச்சி வெளியீட்டிலிருந்து தொகுக்கப்பட்டது