விஷயானுக்ரமணிகை
ஶ்ரீ பகவத்பாதரும் அவர்வழி வந்த காமகோடி பீடாதிபதிகளும் தாடங்க ப்ரதிஷ்டை செய்தமை
“तव जननि ताटङकमहिमा” என்ற பகவத்பாதர் வசனத்திற்கேற்ப
ஜகதம்பிகையின் தாடங்கங்கள் அவள் தம் துணைவருக்கு மட்டுமன்றி அனைத்துலகிற்கும் நன்மை பயக்கும். அத்தகைய விசேஷமான தாடங்கங்களை ஸ்ரீ சக்ராகாரமாக தேவி அகிலாண்டேஶ்வரிக்கு திருவானைக்காவில் உள்ள அன்னைக்கு அணிவித்து லோகக்ஷேமத்திற்கு வழிவகுத்தார் ஶ்ரீ சங்கர பகவத்பாதர். இது “श्रीचक्रात्मक-ताटङ्क-पोषिताम्बा-मनोरथः” என்ற அன்னாரது நாமத்தால் விளங்கும். அகிலாண்டேஶ்வரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவத்திலும் “यति-कृत-श्रीचक्र-भूषोज्ज्वले” என்று தாடங்கங்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த தாடங்கங்கள் ஜீர்ணம் அடைந்த போதெல்லாம் அதை செப்பனிடும் பணி அந்த ஶ்ரீ பகவத்பாதர் ஸ்தாபித்த ஶ்ரீ காஞ்சி காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடத்தின் ஜகத்குருக்களுக்கே உரிய பாரம்பரிய அதிகாரமாக இருந்து வந்துள்ளது. இவ்வாறு காலம் காலமாய் பரிபாலிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, கடந்த சில நூற்றாண்டுகளில் ஶ்ரீ காமகோடி பீடாதிபதிகள் செய்த தாடங்க ப்ரதிஷ்டை விவரங்கள்:
ஶாங்கர ஸம்வத்ஸரம் 2195, பொ.யு. 1686 அக்ஷய வர்ஷம் – 59வது ஜகத்குரு |
ஶாங்கர ஸம்வத்ஸரம் 2266, பொ.யு. 1757 ஈஶ்வர வர்ஷம் – 62வது ஜகத்குரு |
ஶாங்கர ஸம்வத்ஸரம் 2355, பொ.யு. 1846 பராபவ வர்ஷம் – 64வது ஜகத்குரு 65வது ஜகத்குரு பூர்வாஶ்ரமத்தில் கைங்கர்யம் செய்ய |
ஶாங்கர ஸம்வத்ஸரம் 2416, பொ.யு. 1908 ப்லவங்க வர்ஷம் – 68வது ஜகத்குரு |
ஶாங்கர ஸம்வத்ஸரம் 2432, பொ.யு. 1923 ருதிரோத்காரி வர்ஷம் – 68வது ஜகத்குரு |
ஶாங்கர ஸம்வத்ஸரம் 2500, பொ.யு. 1992 ப்ரஜாபதி வர்ஷம் – 69வது ஜகத்குருவுடன் 70வது ஜகத்குரு |
ஶாங்கர ஸம்வத்ஸரம் 2533, பொ.யு. 2025 (பிப்ரவரி 16) க்ரோதி வர்ஷம் – 70வது ஜகத்குரு |
இந்நூல் இயற்றப்பட்டமை
68வது ஜகத்குரு பொயு 1923ல் செய்த தாடங்க ப்ரதிஷ்டையை வர்ணிக்கும் வண்ணம் “ஶ்ரீமத் அகிலாண்டேஶ்வரீ தாடங்க ப்ரதிஷ்டா மஹோத்ஸவ சம்பூ” என்ற பெயர் கொண்ட ஸம்ஸ்க்ருத காவ்ய நூல் அவ்வருடமே இயற்றப்பட்டது. இந்த ஆசார்ய ஸ்வாமிகளின் வித்யாகுருமார்களுள் ஒருவரான பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள் என்ற பெரியவரின் சகோதரரும் சிஷ்யருமான பைங்காநாடு பஞ்சாபகேச சாஸ்திரிகளால் இயற்றப்பட்டது. ஶ்ரீரங்கம் வாணீ விலாஸ அச்சகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூல் உரைநடையும் செய்யுளும் கலந்த ஆறு ஸ்தபகங்கள் எனும் அத்தியாயங்கள் கொண்டது.
தற்போது 70வது ஜகத்குருவினால் பொயு 2025ல் மீண்டும் செய்யப்படும் தாடங்க ப்ரதிஷ்டையைக் கொண்டாடும் விதமாக, சுமார் 102 வருடங்கள் கழித்து இந்த நூல் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியிடப்படுகிறது.
பொருளடக்கம்
முதல் ஸ்தபகம்:
இதில் 68வது ஆசார்ய ஸ்வாமிகள் தஞ்சாவூரிலிருந்து விஜய யாத்திரையாக புறப்படுகிறார். அப்போது திருவானைக்காவல் பூஜகர்கள் மற்றும் பிறர் தாடங்கங்கள் ஜீர்ணமாகி உள்ளதாகவும் ஶ்ரீ மடத்தின் பாரம்பரிய உரிமை பற்றியும் விஜ்ஞாபிக்கிறார்கள். உரித்த நேரத்தில் அன்னையின் ஸங்கல்பப்படியே அனைத்தும் நடக்குமென்று கூறி ஜகத்குரு விஜய யாத்திரையை தொடர்கிறார்.
இரண்டாம் ஸ்தபகம்:
ஸ்வாமிமலையில் ஜகத்குரு தங்கி இருக்கையிலே ஸதாசிவ டாகர் என்ற ரத்ந வியாபாரியான பக்த ரத்நம் ஆசார்ய ஸ்வாமிகளை வணங்கி தாம் இந்த கைங்கர்யத்தை செய்யும் பாக்யம் பெற வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார். ஜகத்குருவும் அதை ஏற்று அருள்கிறார். அதன் பின் பட்டுக்கோட்டை முதலிய நகரங்களுக்கு செல்கிறார். ஏகாம்ரர் என்ற சிஷ்யரின் வேண்டுகோளுக்கிணங்கி வ்யாஸ பூஜைக்கு ஆவுடையார் கோவில் செல்கிறார்.
மூன்றாம் ஸ்தபகம்:
அங்கிருந்து மஹோதய புண்யகாலத்திற்கு ஶ்ரீராமஸேதுக்கு செல்கிறார் ஜகத்குரு. அங்கு ராமேஶ்வரத்தில், தாடங்க ப்ரதிஷ்டைக்கு பத்திரிகை முதலிய பணிகளை செய்ய நடேசய்யர் எனும் சிறந்த பக்தர் உத்தரவு பெறுகிறார். ஆசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீ காமகோடி பீடத்தின் பாரம்பரிய வழக்கப்படி ராமநாத ஸ்வாமி ஸந்நிதிக்குள் சென்று பூஜை செய்கிறார்.
நான்காம் ஸ்தபகம்:
ஜகத்குரு ராமநாதபுரம் சென்று தம்பால் பக்தி மிகுந்த சேதுபதிக்கும் அனுக்ரஹிக்கிறார். அதன் பின் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று மதுரை செல்கிறார். மதுரையம்பதியிலும் ஸ்ரீ காமகோடி பீடத்தின் பாரம்பரிய வழக்கப்படி ஸ்வாமி ஸந்நிதிக்குள் சென்று ஏகாந்தமாக பூஜிக்கிறார்.
ஐந்தாம் ஸ்தபகம்:
ஜகத்குரு கந்தசாமி அய்யர் போன்றோருக்கு பத்திரிகை அச்சிட உத்தரவும் தேப்பெருமாநல்லூர் அன்னதான சிவனுக்கு போஜன ஏற்பாடு செய்யும் ஆஜ்ஞையும் பிறப்பித்தார். அதன்பின் தென்காசி, பாபவிநாசம், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களுக்குச் சென்று அங்கிருந்து புதுக்கோட்டை சென்று அதன்பின் பழனி செல்கிறார். பழனியில் முருகனை வழிபட்டு அங்கிருந்து கீரனூர் சென்று மாத்தூர் வழியாக திருவானைக்காவல் வந்து சேர்கிறார்.
இந்த ஸ்தபகத்தின் இறுதியில் ஸ்வாமிகள் வருகைக்கு ஊர் எவ்வாறு தயாராகிறது என்று விவரிக்கப்படுகிறது.
ஆறாம் ஸ்தபகம்:
ஸ்வாமிகள் திருவானைக்காவல் வந்து ஜகத்குரு வித்யாஸ்தானத்தில் புதுப்பிக்கப்பட்ட மடத்தில் தங்கி சந்த்ரமௌலீஶ்வர பூஜை செய்கிறார்.
போஜனம் வழங்கும் உயரிய பணியை சீரிய முறையில் அன்னதானம் சிவன் எவ்வாறு ஏற்பாடு செய்திருக்கிறார் என்ற வர்ணனையையும், அங்கே வாக்யார்த்தமும் வேதகோஷமும் பாகவதமும் இசையும் வாத்யங்களும் எவ்வாறு தொடர்ந்து ஒலிக்கின்றன என்றவைகளும் விவரிக்கப்படுகின்றன.
ஸதாசிவ டாக்கர் செப்பனிட்ட ஆபரணத்தை ஜகத்குருவிடம் ஸமர்ப்பிக்க அவரும் அதை சந்த்ரமௌலீஶ்வர பூஜையில் வைக்கிறார். தாடங்க ப்ரதிஷ்டை செய்யும் சுபமுஹூர்த்தம் நெருங்கவே சிஷ்ய ஸமூஹம் இந்த வைபவத்தைக் காண ஒன்று திரண்டு வருகிறது. கூட்டத்தின் நடுவில் மெதுவாக ஆசார்ய ஸ்வாமிகள் உள்ளே செல்கிறார். அன்னையை ஐந்து ரத்நங்கள் இழைத்த பாமாலையால் பாடிப்பரவி அதன் பின் தாடங்கங்களை அன்னையின் காதுகளில் அணிவிக்கிறார்.
நிறைவுரை
இந்த நூல் கடந்த காலத்தின் முக்கியமான வரலாற்று ஆவணமாகவும், ஸ்ரீமடத்தின் பாரம்பரிய உரிமைகள் மற்றும் நடைமுறைகளுக்கான சான்றாகவும் திகழ்கிறது. ஶ்ரீ பஞ்சாபகேச சாஸ்திரிகள் அப்போது இளம் வயதில் இருந்த ஜகத்குருவை விட வயதில் மூத்தவரான வித்வான் என்பது நோக்கற்பாலது. இதனாலும் அவரது பதிவுகள் இந்த பாரம்பரியங்களைப் புரிந்துகொள்ள முக்கியமாக ஆதாரங்களாக விளங்குகின்றன.
இந்நூலின் ஒளிவருடல் பிரதியைத் தந்துதவிய சித்தன்வாழூர் ராஜகோபால சாஸ்திரிகள் மற்றும் அவர்தம் குமாரர் ஸ்ரீராம சாஸ்திரிகளுக்கு எங்கள் நன்றிகள்.